இல்லம் > semmozhi > சிந்து சமவெளி திராவிடர்களின் கடவுள் முருகர் : பேராசிரியர் அஸ்கோ பர்போலா ஆய்வு கட்டுரையில் தகவல்

சிந்து சமவெளி திராவிடர்களின் கடவுள் முருகர் : பேராசிரியர் அஸ்கோ பர்போலா ஆய்வு கட்டுரையில் தகவல்

கோவை : சிந்து சமவெளி எழுத்துக்களை ஆய்வு செய்ததில், முருகன், ஆரிய கடவுள் ருத்ரா -ஸ்கந்தா ஆகியோர் திராவிடர் வணங்கிய கடவுள்களாக இருந்தார்கள் என்று ஆய்வில் தெரியவருகிறது, என்று “செம்மொழி தமிழ்’ விருது பெற்ற பின்லாந்து பேராசிரியர் அஸ்கோ பர்போலா சிந்துசமவெளி எழுத்துக்கள் குறித்து ஆய்வு கட்டுரையில் கூறியுள்ளார்.

கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் வெளிநாட்டு அறிஞர்கள், பேராசிரியர்கள் பங்கேற்று, தமது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்கின்றனர். பின்லாந்து நாட்டை சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலா, சிந்து சமவெளி நாகரிகம், திராவிடர்களின் நாகரிகம் பற்றி ஆய்வு செய்து வருகிறார். இவருக்கு மாநாட்டு முதல் நாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் “செம்மொழி தமிழ்’ விருது வழங்கினார். இவர் “சிந்து சமவெளி எழுத்துக்களுக்கான திராவிட தீர்வு’ என்ற தலைப்பில் 35 பக்கம் ஆங்கிலத்தில் எழுதிய ஆய்வுக் கட்டுரையை, முதல்வர் கருணாநிதி முன்னிலையில் மாநாட்டில் சமர்ப்பித்தார்.

அவர் தமது ஆய்வு குறித்து பேசியதாவது:  சிந்து சமவெளி நாகரிகம் நிலவிய ஹரப்பா பகுதியில், 1870 மற்றும் 1890ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், எந்த மொழி என்று அறிதியிட்டு கூற முடியாத, கற்களில் பொறிக்கப்பட்ட எழுத்து வடிவங்கள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் அகழாய்வு செய்ததில் மெசபடோமியா பகுதியில் பல எழுத்து வடிவங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதன் அடிப்படையில் சிந்து சமவெளி நாகரிக காலம் கி.மு. 2600 -1900 என்பதை ஆய்வுகள் மூலம் உறுதியானது. இக்கல்வெட்டு, எழுத்துக்கள் வளைகுடா கடல் வாணிபர்களால் அந்த பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்களால் அந்த எழுத்துக்களை புரிந்து கொள்வதில் சிரமம் இருந்துள்ளது.
சிந்து சமவெளி நாகரிகம் அழிந்தபோதே, சிந்து சமவெளி எழுத்து வடிவங்கள் சேர்ந்து அழிந்து விட்டது. ஆனாலும் பாதுகாக்கப்பட்ட சில எழுத்து வடிவங்கள் ஆய்வுக்கும், ஹரப்பாவில் பயன்படுத்தப்பட்ட மொழியினை அறிய உதவுவது திராவிட மொழிகளேயாகும், அவற்றின் மூலம் பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது. மத்திய மற்றும் தென்னிந்தியாவில் 26 திராவிட மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. எனினும், கி.மு. 1100 -600ம் ஆண்டுகளில், வடமேற்கு பகுதியில் காணப்பட்ட இந்தோ-ஆரிய உருவ வடிவ எழுத்துக்களில்,முகம்,பலம், காணா, கியாம்பு ஆகிய திராவிட மொழி எழுத்துக்கள் இருப்பதை அறிய முடிகிறது.

வரலாற்று மொழிகள் வாயிலாக நாம் அறிய முடிவது என்னவென்றால், சிந்து சமவெளி பகுதி மக்கள் (ஹரப்பா) திராவிட மொழியைத்தான் பேசியிருக்க வேண்டும் என்று தெரியவருகிறது. சிந்து சமவெளி மதங்களை பற்றி படிக்க பழந்தமிழ் இலக்கியங்கள் உதவிக்கு வருகின்றன. போர் மற்றும் காதலில் சிறந்து விளங்கிய “இளமை’ கடவுளை வணங்கினர். அக்கடவுள் வடஇந்தியர்கள் வணங்கிய போர்க்கடவுளான “ஸ்கந்தா’வோடு ஒத்து காணப்படுகிறது. அக்கடவுளுக்கு இளமை, இளைஞன் எனும் பொருள்பட முருகு அல்லது முருகன் என்ற திராவிட பெயர்கள் வழங்கப்பட்டன.  வேதங்களில் ஸ்கந்தாவுக்கு முன்னோராக குறிப்பிடப்படும் “ருத்ரா’ என்னும் கடவுள், பச்சிளங்குழந்தையாக உருவாக்கப்பட்டும், சமஸ்கிருதத்தில் “குமாரா’ என்றும் அழைக்கப்படுகிறார். முருகனும், ஸ்கந்தாவும், சிவப்பு நிறம் அல்லது உதிக்கும் சூரியன் எழுத்துவடிவ குறியீடுகளால் குறிப்பிடப்படுகிறார்கள். இதன் மூலம் திராவிட கடவுள் முருகன் மற்றும் ஆரிய கடவுள் ருத்ரா-ஸ்கந்தா ஆகியோர், திராவிடர் வணங்கிய கடவுள்களாக இருந்தார்கள் என்று தெரியவருகிறது.  சிந்துசமவெளி நாகரிக காலத்தைய எழுத்து வடிவங்கள் திராவிட மொழியே பின்னணியில் உள்ளதை தெளிவாகி உறுதியுடன் கூறமுடிகிறது. உருவக எழுத்துக்களின் அர்த்தங்களை கண்டுபிடிக்க, திராவிட மொழியாற்றல் மிக்க பேச்சாளர்கள் தேவையில்லை. இந்திய கலாசாரம் மற்றும் தெற்காசிய தன்மையை பற்றி நன்கு அறிந்திருந்தாலே போதும். இவ்வாறு பேராசிரியர் பர்போலோ பேசினார்.  இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஸ்டாலின் உட்பட தமிழறிஞர்கள் பங்கேற்றனர்.

பிரிவுகள்:semmozhi
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக