தொகுப்பு

Archive for ஜூன், 2010

இராவணன் அரக்கன்

இராவணன் அரக்கன் என்று சொல்லும் புறநானூறு

இராமாயண, மகாபாரதங்கள் சொல்லுவதும் புராணங்கள் பேசும் தொன்மங்களும் தென்னகத்தில் புழங்கி அது பின்னர் வடமொழியில் எழுதப்பட்டது என்றொரு முன்னீடு (Proposal) சில தமிழறிஞர்களால் வைக்கப்படுகின்றது. எனக்கும் பழந்தமிழ் இலக்கியங்களைப் படிக்கும் போது அப்படித் தான் தோன்றுகிறது. பழைய இராமாயணங்கள் என்று திரு. மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதியுள்ள ‘மறைந்து போன தமிழ் நூல்கள்’ என்ற நூலில் காட்டப்படும் சில எடுத்துக்காட்டுகள் அந்தக் கருத்திற்கு வலு சேர்ப்பதாக இருக்கின்றன. அதில் என் கவனத்தை மிகவும் கவர்ந்த ஒரு எடுத்துக்காட்டை இந்த இடுகையில் எடுத்து எழுதுகிறேன்.

இலம்பாடிழந்த என் இரும்பேர் ஒக்கல்
விரல்செறி மரபின செவித்தொடக்குநரும்
செவித்தொடர் மரபின விரற்செறிக்குநரும்
அரைக்கமை மரபின மிடற்றுயாக்குநரும்
மிடற்றமை மரபின அரைக்குயாக்குநரும்
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந்தாஅங்கு
அறாஅ அருநகை இனிது பெற்றிகுமே
(புறநானூறு பாடல் 378 வரிகள் 13 – 21)

முதலில் இந்தப் பாடலுக்கு எனக்குத் தெரிந்த வரை பொருள் சொல்லிவிட்டுப் பின்னர் இதில் இருந்து தோன்றும் எண்ணங்களை/கருத்துகளைச் சொல்கிறேன்.

இலம் பாடு – வறுமை; இல்லை என்பதால் படும் பாடு. வறுமை என்பதற்கு மிக அழகான தமிழ்ச்சொல்.
இழந்த – நீங்கிய
என் இரும் பேர் ஒக்கல் – என் மிக மிகப் பெரிய சுற்றத்தவர்
விரல் செறி மரபின – விரலில் அணிந்து கொள்ள வேண்டிய அணிகலன்களை (நகைகளை)
செவித்தொடக்குநரும் – காதில் தொடுத்துக் கொண்டவர்களும்
செவித்தொடர் மரபின – காதில் தொடுத்துக் கொள்ள வேண்டிய நகைகளை
விரற்செறிக்குநரும் – விரலில் அணிந்து கொண்டவர்களும்
அரைக்கமை மரபின – இடுப்பில் அணிந்து கொள்ள வேண்டியவைகளை
மிடற்று யாக்குநரும் – கழுத்தில் கட்டிக் கொண்டவர்களும்
மிடற்று அமை மரபின – கழுத்தில் அணிய வேண்டியவைகளை
அரைக்கு யாக்குநரும் – இடுப்பில் கட்டிக் கொண்டவர்களும்
(என நின்ற அவர்கள்)
கடுந்தெறல் – மிகக்கடுமையாகப் போர் புரிய கூடிய, மிக்க சினம் கொண்ட – முன்னர் ‘மிக்க இன்பத்தை விளைவிக்கும் தேனை (நிறைய கொண்டிருக்கும், நிறைய உண்ட)’என்று எழுதியிருந்தேன். இந்த இடுகையை மின் தமிழ் குழுமத்தில் இட்ட போது திரு. வேந்தன் அரசு ஐயாவும் திரு. ஹரிகிருஷ்ணன் ஐயாவும் இந்தப் பிழையைச் சுட்டிக் காட்டினார்கள். இப்போது மாற்றிவிட்டேன்.

இராமன்
உடன் புணர் – உடன் வாழும்
சீதையை
வலித்தகை – வலித்த கை என்று பிரித்தால் மிகுந்த வலிமை மிகுந்த கைகளை உடைய, வலித் தகை என்று பிரித்தால் வலிமையில் சிறந்த
அரக்கன் – இராவணன் என்று பெயர் சொல்லவில்லை. ஆனால் அரக்கன் என்ற சொல்லைப் புழங்கியிருக்கிறார் புலவர்
வௌவிய ஞான்றை – கவர்ந்து சென்ற போது
நிலஞ்சேர் மதரணி – நிலத்தில் வீசப்பட்ட அணிகலன்களைக்
கண்ட குரங்கின் செம்முகப் பெருங்கிளை – கண்ட குரங்கின் சிவந்த முகங்களைக் கொண்ட பெரிய கூட்டம்
இழைப்பொலிந்தாங்கு – அணிகலன்களை (இடம் மாற்றித் தம் உறுப்புகளில்) அணிந்து கொண்டதைப் போல (இருந்தது)
அறாஅ அருநகை – (அதனைக் கண்டு) நிறுத்த முடியாத அளவிற்குப் பெருஞ்சிரிப்பை
இனிது பெற்று இகுமே – இனிமையுடன் பெற்று சிரித்துக் கொண்டிருந்தேன்.

***
வறுமையில் இருந்த தம் சுற்றத்தார் ஒரு அரசன் தந்த பரிசில்களால் தம் வறுமை நீங்கிய போது அப்போது தான் முதன்முதலாகப் பார்க்கும் அணிகலன்களை இடம் மாற்றி அணிந்து கொண்டது குரங்குகள் நகைகளை இடம் மாற்றி அணிந்து கொண்டதைப் போல் மிக்க நகைச்சுவையாக இருந்தது என்கிறார் இந்தப் புலவர்.

இலம்பாடு இழந்த என்று சொல்லும் போது மிக்க சுவையுடன் இருக்கிறது. ‘இல்லை என்னும் பாடு இனி ஒழிந்தது’ என்ற மகிழ்ச்சி நன்கு தொனிக்கிறது.

என் இரும் பேர் ஒக்கல் என்ற போது தன் சுற்றத்தார் என்னும் பாச உணர்வும் சுற்றம் தழால் (சுற்றத்தைக் காப்பாற்றுதல்) என்னும் பெருங்குணமும் நன்கு காட்டப்படுகின்றன. பொருள் வந்த போது தானும் தன் குடும்பத்தாரும் மட்டுமே அனுபவிக்காமல் தன் மிகப்பெரிய சுற்றத்தவர்கள் எல்லாம் அதனை அனுபவிக்கக் கொடுத்து அதில் மகிழும் புலவரின் அருங்குணம் தெரிகிறது.

‘கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின் செம்முகப்பெருங்கிளை இழைப்பொலிந்தாங்கு’ என்ற நான்கு அடிகளால் வால்மீகி இராமாயணத்திலும் கம்பராமாயணத்திலும் வரும் கதைப்பகுதியைச் சொல்கிறார். இந்தத் தொன்மம் ஆதிகாவியமாகிய வால்மீகியின் வடமொழி நூலில் தான் முதன் முதலில் வந்தது என்று சொல்வோம். அந்த ஆதிகாவியத்தில் வருவதற்கு முன்பே சங்ககாலப் புலவராகிய இவருக்கு இந்தத் தொன்மம் தெரிந்து இருந்திருக்கிறது.

உவமை அணியின் இலக்கணமே ‘தெரியாத ஒன்றிற்கு தெரிந்த ஒன்றை உவமையாகச்’ சொல்லுவதே. இங்கே சுற்றத்தவரின் நிலையைச் சொல்லும் போது குரங்குகளின் நிலையை உவமையாகக் காட்டுவது இந்தத் தொன்மம் புலவருக்கு மட்டும் இல்லாமல் இந்தப் பாடலை அரங்கேற்றும் அவையில் இருப்பவருக்கும் இந்தப் பாடலைப் படித்து அனுபவிக்கும் வாய்ப்பு உடையவருக்கும் இந்தத் தொன்மம் தெரிந்திருந்தது என்பதைக் காட்டுகிறது.
இப்படி பெரும்பாலாவருக்குத் தெரிந்த கதையாக இராமாயணக்கதை சங்ககாலத்திலேயே இருந்திருக்கிறது. கம்பனின் காலத்தில் காவிய வடிவை அது பெற்றிருந்திருக்கலாம். அவ்வளவே.

இராமன் சீதை என்று கதையின் தலைவன் தலைவி பெயரைச் சொன்ன புலவர் வில்லனின் பெயரைச் சொல்லாமல் அரக்கன் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பது சங்ககாலத்திலேயே சீதையைக் கவர்ந்தவன் அரக்கன் என்ற கருத்து நன்கு நிலை நாட்டப்பெற்றிருந்தது என்று காட்டுகிறது.

சீதையின் நகைகளைக் கண்டபடி அணிந்தவர்கள் குரங்குகூட்டத்தினர் என்று மிகத்தெளிவாகச் சொல்லியிருப்பதும் கவனத்திற்குரியது.

தமிழர்களை அரக்கர்கள் என்றும் குரங்குகள் என்று வடநூலார் இராமாயணத்தில் எழுதியிருக்கிறார்கள் என்ற கருத்து மிகுந்த வலிவுடன் நம்மிடையே இருக்கிறது. சீதையை வௌவியவன் அரக்கன் என்று இந்தத் தமிழ்ப்புலவர் சங்ககாலத்திலேயே சொல்லியிருக்கிறார். வௌவியவன் தமிழன் என்றால் அவனை அரக்கன் என்று குறிப்பாரா? அவனை அரக்கன் என்று குறித்துவிட்டு இராமனையும் சீதையையும் பெயருடன் குறிப்பது சிந்திக்க வேண்டிய ஒன்று தானே?

தமிழர்களைக் குரங்குகள் என்று சொன்னார்கள் என்ற கருத்தும் இந்தப் பாடலினால் அடிபட்டுப் போகிறது. சங்கத் தமிழ்ப் பாடலிலேயே குரங்குகள் என்று தெளிவாக இருக்கிறது.

வன நரர்களை (காட்டு மனிதர்களை) வானரர்கள் (குரங்குகள்) என்று வால்மீகி இராமாயணம் சொல்லிவிட்டது என்றதொரு கருத்தும் இருக்கிறது. அந்த க்ருத்தின் வலிமையும் இந்தப் பாடலுக்கு முன் அடிபட்டுப் போகிறது.

தமிழர்களையோ மற்ற இனத்தவர்களையோ குரங்குகள் என்று வடநூலார் சொல்லவில்லை. இந்த தொன்மத்தின் படி அவை குரங்குகளே; அப்படித் தான் சங்ககாலத்திலும் தொன்மம் சொல்லப்பட்டிருக்கிறது; பின்னர் மற்ற காவிய இராமாயணங்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றது.

இந்த ஒரு பாடல் எடுத்துக்காட்டால் இராமாயணம் ஆரிய திராவிட போரின் காவிய உருவம் என்றும் ஆரியர்கள் திராவிடர்களைக் கேவலமாக எழுதியிருக்கிறார்கள் என்றும் சொல்லப்படும் கருத்துகள் தூள் தூளாகிவிட்டன என்று சொல்லமாட்டேன். அந்தக் கருத்துகளுக்கும் தரவுகள் இருக்கலாம். பலர் ஆராய்ந்து சொன்னவைகளை அப்படி எளிதாக புறந்தள்ளிவிட முடியாது. ஆனால் அவை சொல்லும் கருத்துகளுக்கு எதிராக இப்படி ஒரு புறநானூற்றுப்பாடல் இருக்கிறது. அந்தத் தரவினைக் கண்டு நண்பர்கள் சிந்திக்கவேண்டும் என்பதே இந்த இடுகையின் நோக்கம்.

Categories: semmozhi

அகலிகைக் கதை சங்க இலக்கியத்தில்

நட்சத்திரம்* – அகலிகைக் கதை சங்க இலக்கியத்திலா? வாய்ப்பே இல்லை!
“நண்பரே. இந்த அகலிகைக் கதை வடநூல்களில் தானே காணப்படுகிறது. இந்தத் தொன்மம் எவ்வளவு தொன்மையானது என்று தெரியுமா?”

“நண்பா. வடமொழிப் புராணங்களும் இதிகாசங்களும் அகலிகைக் கதையைக் கூறுகின்றன என்பது உண்மை தான். ஆனால் அந்தத் தொன்மம் வடநூற்களில் மட்டுமில்லாது தமிழ் இலக்கியங்களிலும் இருக்கின்றன. அதனால் அது மிகத் தொன்மையான ஒரு கதை என்றே சொல்லலாம்”

“பாற்கடலை நக்கியே குடித்துத் தீர்க்கும் ஆசையில் பூனை இறங்கியது போல் வால்மீகி வடமொழியில் எழுதிய இந்த இராமாவதாரக் கதையைத் தமிழில் எழுத இறங்கினேன் என்று சொல்லி இராமாவதாரக் காவியம் எழுதினாரே கம்பர் அவர் இலக்கியத்தில் அகலிகைக் கதை வருவதைச் சொல்கிறீர்களா?”

“நீ சொன்னது போல் கம்பநாட்டாழ்வாரின் காவியத்தில் அகலிகைக் கதை வருகின்றது தான். உன் குறிப்பையும் புரிந்து கொண்டேன். அது வடமொழி இதிகாசத்தின் தழுவல் தானே; அதில் அகலிகைக் கதை வருவதில் வியப்பென்ன என்கிறாய். சரியா?”

“ஆமாம். கம்பராமாயணத்தில் அகலிகைக் கதை வருவதில் வியப்பில்லை. வடமொழியாளர்களின் கற்பனைக் கதையான இந்தக் கதை தொன்மையான கதை என்பதற்கு இந்தத் தரவு மட்டும் போதாது”

“ஹாஹாஹா. நான் கம்பரின் இராமாவதாரக் காவியத்தைப் பற்றியே குறிப்பிடவில்லை. நீயாக அதனைத் தான் நான் சொல்கிறேன் என்று நினைத்துக் கொண்டு அந்தத் தரவு போதாது என்று சொல்கிறாய். பழந்தமிழ் இலக்கியங்கள் என்று நீயும் ஒப்புக் கொள்ளும் படியான சங்க இலக்கியங்களிலேயே இந்தக் கதை சொல்லப்பட்டிருக்கிறது.

வடமொழி நூற்களை ஆய்ந்த அளவிற்குப் பழந்தமிழ் நூற்களை ஆய்வு செய்யாததால் நிறைய பேருக்கு இதெல்லாம் தெரிவதில்லை. வடமொழி நூற்களை மட்டுமே நோக்கிய பார்வையைக் கொஞ்சம் பழந்தமிழ் இலக்கியம் பயில்வதற்கும் திருப்பு. அப்படிச் செய்தால் இன்னும் பல செய்திகள் தெளிவாகும்”

ahalya.jpg“சங்க இலக்கியத்திலேயே இருக்கிறதா? பொய் சொல்லாதீர்கள். புராணங்கள் சொல்வதெல்லாம் கற்பனைக் கதைகள். அந்தக் கற்பனைக் கதைகள் சங்க இலக்கியங்களில் இருக்கவே இருக்காது.”

“நண்பா. நான் சொல்லுவதை நம்ப இயலாவிட்டால் நீயே படித்துப் பார்க்கலாம் அல்லவா?”

“அதற்கெல்லாம் நேரமில்லை நண்பரே. அகலிகைக் கதை சங்க இலக்கியங்களில் வருகிறது என்பதற்கு ஒரே ஒரு தரவு தாருங்கள். பின்னர் நீங்கள் சொல்லுவதை நம்புகிறேன்”

“சரி தான். தமிழ் இலக்கியங்கள் என்று வந்துவிட்டாலே எல்லோரும் வாழைப்பழ சோம்பேறிகள் ஆகிவிடுகிறார்கள். சரி. நானே பழத்தை உரித்து உன் வாயில் ஊட்டுகிறேன்.

திருப்பரங்குன்றத்தில் இருக்கும் மால்மருகன் திருக்கோவிலின் அருகில் நடைபெறும் நிகழ்ச்சிகளைச் சொல்லி வரும் போது நப்பண்ணனார் இயற்றிய பரிபாடல் தொகுப்பின் பத்தாம் பாடல் அகலிகைக் கதையைப் பேசுகின்றது. அங்கிருக்கும் குரங்குகளுக்கு தின்பண்டங்களைச் சிலர் தருகிறார்கள்; சிலர் யானைகளுக்குக் கரும்புகளைத் தருகிறார்கள்; சிலர் தெய்வீகமான பிரமவித்தையைப் பற்றி பேசுகிறார்கள்; சிலர் குழல் இசைக்கிறார்கள்; சிலர் யாழ் இசைக்கிறார்கள்; சிலர் வேள்வியின் பெருமைகளைச் சொல்கிறார்கள்; சிலர் முரசுகளை ஒலிக்கிறார்கள்; சிலர் முறைப்படி வானத்தில் வரும் விண்மீன்களையும் இருசுடர்களையும் கொண்டு வகுக்கப்பட்ட கலையை கற்றுக் கொண்டிருக்கிறார்கள்; இப்படி இருக்கும் போது காமனும் இரதியும் போன்ற இளையவர்கள் அசையாது அமர்ந்து இவற்றை எல்லாம் நோக்குகிறார்கள். அவர்கள் அப்படி அசையாது இருப்பது எப்படி இருக்கின்றதென்றால் – இந்திரன் பூனையாக இருக்கும் போது கவுதமன் சினம் கொள்ள அதனால் அகலிகை கல்லுருவாகி நின்றாளே – அது போல இருக்கிறது என்று சிலர் சொல்கிறார்கள்.”

“இந்த விளக்கம் எல்லாம் சரி தான். பாடலைச் சொல்லுங்கள். அந்தப் பாடல் வரிகள் இதனைத் தான் சொல்கிறதா இல்லை நீங்கள் உரை செய்யும் போது மாற்றிவிட்டீர்களா என்று அப்போது தான் அறியலாம்”

“என் மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா அன்றி பழந்தமிழர் மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா தெரியவில்லை. பாடல் வரிகளைச் சொல்கிறேன். கேள்.

குரங்கு அருந்து பண்ணியம் கொடுப்போரும்
கரும்பு கருமுகக்கணக்கு அளிப்போரும்
தெய்வப் பிரமம் செய்குவோரும்
கைவைத்து இமிர்பு குழல் காண்குவோரும்
யாழின் இளிகுரல் சமம் கொள்வோரும்
வேள்வியின் அழகியல் விளம்புவோரும்
கூர நாண்குரல் கொம்மென ஒலிப்ப
ஊழுற முரசின் ஒலி செய்வோரும்
என்றூழ் உற வரும் இருசுடர் நேமி
ஒன்றிய சுடர் நிலை உள்படுவாரும்
இரதி காமன் இவன் இவள் எனாஅ
விரகியர் வினவ வினாவிறுப்போரும்
இந்திரன் பூசை இவள் அகலிகை இவன்
சென்ற கவுதமன் சினன் உறக் கல்லுரு
ஒன்றிய படி இதென்று உரை செய்வோரும்
இன்ன பல பல எழுத்து நிலை மண்டபம்
துன்னுநர் சுட்டவும் சுட்டறிவுறுத்தவும்
நேர்வரை விரியறை வியலிடத்திழைக்கச்
சோபன நிலையது துணி பரங்குன்றத்து
மாஅல் மருகன் மாட மருங்கு…”

“எனக்குப் புரியக்கூடாது என்றே வேகவேகமாகச் சொல்லிவிட்டீர்கள். இதில் இந்திரன், அகலிகை என்றெல்லாம் இருப்பது நீங்கள் சொல்லும் போது கேட்டது. ஆனால் இது அகலிகைக் கதையைத் தான் சொல்கிறது என்று எப்படி சொல்ல முடியும்?”

“நன்றாய் கேட்டாய் நண்பா. அகலிகைக் கதையில் கவுதமன் திரும்பி வரும் போது இந்திரனின் நிலை என்ன என்று நினைவிருக்கிறதா?”

“கவுதமன் வருவதைக் கண்டவுடன் இந்திரன் பூனை வடிவம் எடுத்து நிற்பானே அதனைச் சொல்கிறீர்களா?”

“ஆமாம். அதனைத் தான் இங்கே இந்தப் பாடலில் தெளிவாகச் சொல்லியிருக்கிறது. இந்திரன் பூசை – இந்திரன் பூனையாக நின்றான்; இவள் அகலிகை – இந்தப் பெண் அகலிகை; இவன் சென்ற கவுதமன் – இவன் குளிக்கச் சென்ற கவுதமன்; அந்தக் கவுதமன் சினம் கொள்ள அகலிகை கல்லுரு கொண்டது போல் இவர்கள் நிலை. இப்படித் தெளிவாக அகலிகைக் கதை சொல்லப்பட்டிருக்கிறது”

“அதெல்லாம் சரி. இந்திரன் பூனையாக இருந்ததை இந்தப் பாடல் சொல்கிறதென்றே வைத்துக் கொள்வோம். அகலிகை கல்லானதைச் சொல்லும் இந்தப் பாடல் இந்திரன் பெற்ற சாபத்தைப் பற்றி சொல்கிறதா?”

“இந்திரன் பெற்ற சாபத்தைப் பற்றி இந்தப் பாடல் சொல்லவில்லை நண்பா. ஆனால் பரிபாடலில் இன்னொன்று சொல்கிறது. குன்றம்பதனார் இயற்றிய ஒன்பதாம் பாடல் அது. செவ்வேளின் மனைவியைப் பற்றி குறிப்பிடும் போது அவள் இந்திரன் மகள் என்பதைக் குறிக்க “ஐயிரு நூற்று மெய்ந்நயனத்தவன் மகள்” என்று சொல்கிறது. இந்திரன் உடல் முழுவதும் ஆயிரம் கண்களை உடையவன் என்ற குறிப்பு அகலிகைக் கதையில் இந்திரன் பெற்ற சாபத்தைக் குறிக்கிறது. சரியா?”

“சரி தான். இன்னும் என்ன என்னவோ பிரமவித்தை, வேள்விகளின் பெருமை, கோள் நிலைக் கலை என்றெல்லாம் சொன்னீர்களே. அவற்றைப் பற்றியும் இங்கே சொல்லியிருக்கிறதா?”

“சொல்லியிருக்கிறது நண்பா. நீயே ஒரு முறை இந்தப் பத்தாம் பாடலைப் படித்துப் பார். தெரியும்”

“கடைசியாக ஒன்று. முருகன் திருமாலின் மருகன் என்று சொன்ன கதையெல்லாம் இடைக்காலத்தில் தமிழ்க்கடவுளான முருகனைத் தங்களுக்குரியவன் ஆக்கிக் கொள்ள வைணவ வடக்கத்தியர் செய்த சூழ்ச்சி தானே. நீங்களும் பொருள் சொல்லும் போது மால் மருகன் என்று சொன்னீர்களே. வலிந்து நீங்களே சொன்னது தானே”

“அடடா. என்ன ஒரு அவநம்பிக்கையும் அரைகுறை ஆராய்ச்சியும்! இலக்கியங்களைப் படிக்காமலேயே மனத்திற்குத் தோன்றியபடி எல்லாம் போகிற போக்கில் இப்படி சொல்லிச் செல்கிறார்கள் சில பேர். அவர்கள் சொல்வதெல்லாம் ஆராய்ச்சி என்றும் வேறு சிலர் போற்றுகிறார்கள். எல்லாம் சங்க இலக்கியங்களைப் பெரும்பான்மையோர் கற்காததால் வரும் விளைவுகள்.

நான் வலிந்து இதனைச் சொல்லவில்லை. நீயே இந்த பரிபாடலை நேரடியாகப் படித்துப் பார்த்துக் கொள். மிக மிகத் தெளிவாக பரங்குன்றத்து மால் மருகன் மாடம் என்று திருப்பரங்குன்றம் கோவிலைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள். முருகனை மால் மருகன் ஆக்கியது பிற்காலத்தவர் சூழ்ச்சி என்றால் இங்கே சொல்லப்படும் மால் மருகன் யாரோ? திருப்பரங்குன்றத்துக் கோவிலும் எவருடையதோ?

841Murugan.jpg

அது மட்டுமில்லை நண்பா. கச்சியப்பர் கந்த புராணம் எழுதும் காலம் வரை முருகனுக்கு வள்ளி என்ற மனைவி மட்டுமே உண்டு; இந்திரன் மகளான தேவசேனையை அவனுக்கு முதல் மனைவியாக்கியது ஆரியர் சூது என்று சொல்லுவோரும் உண்டு. அவர்கள் இந்தப் பரிபாடலை எல்லாம் படித்ததில்லை போலும். இந்த ஒன்பதாம் பாடலில் மிகத் தெளிவாக செவ்வேளின் மனைவி தேவசேனை என்றும் அவள் இந்திரனின் மகள் என்றும் சொல்லியிருக்கிறது. திருமுருகாற்றுப்படையில் தேவசேனையாம் தெய்வயானையின் பெயர் வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை; ஆனால் அங்கும் திருப்பரங்குன்றத்தைப் பற்றி பேசும் போது ‘மறு இல் கற்பின் வாணுதல் கணவன்’ என்று ‘இரு சாராரும் முன் நின்று நடத்த நடந்த திருமணத்தினால் அமைந்த மனைவி’ என்று தேவசேனையின் பெயர் குறிப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. நேரடியாகச் சொல்லியிருந்தாலும் சரி; குறிப்பாகச் சொல்லியிருந்தாலும் சரி; நாங்கள் சொல்வதே சரி. தரவுகளைப் பார்க்கமாட்டோம் என்றிருப்பவர்களை என்னவென்று சொல்வது?

ஒன்றை மட்டும் கடைசியாகச் சொல்லிக் கொள்கிறேன். நல்லதென்று நாம் இன்று நினைப்பவை எல்லாம் எல்லாக் காலத்திலும் நல்லவையாகவே நினைக்கப்பட்டவை இல்லை; கெட்டதென்று நாம் இன்று நினைப்பவையும் அப்படியே.

அதே போல் நல்லவை என்று நாம் இன்று நினைப்பவை மட்டுமே நமக்குரிய்வை; நாம் கெட்டது என்று நினைப்பவை எல்லாம் அந்நியர்கள் கொண்டு வந்து நுழைத்தவை என்று நினைப்பதும் அறிவுடைமை ஆகாது. நல்லதும் கெட்டதும் எல்லா வகையினரிடமும் உண்டு. முடிந்தவரையில் விருப்பு வெறுப்பின்றி ஒன்றை நோக்கக் கற்றுக் கொள்வதே நல்லது.

http://koodal1.blogspot.com/2008/08/kumaran-star-post-sanga-ilakkiyam.html

Categories: semmozhi

டாக்டர் அம்பேத்கர்-தலித்துகளும் ஆரியரே

டாக்டர் அம்பேத்கர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்-
Ambedkar Image(டாக்டர் அம்பேத்கர், உரைகளும் எழுத்துகளும் பாகம். VII)

ஆரிய படையெடுப்பு ஒரு புனை கதை. இக்கோட்பாடு சிலரின் மனத்தை மகிழ்விக்க உருவாக்கப்பட்ட நம்பிக்கைகள், அந்நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சித்தாந்தங்கள் ஆகியவற்றின் மூலம் கட்டப்பட்டது. அறிவியல் ஆய்வு வக்கிரப் பட்டுப் போனதின் விளைவே அது. உண்மைகளின் அடிப்படையில் பரிணமித்ததல்ல இக்கோட்பாடு. மாறாக கோட்பாட்டின் அடிப்படையில் அதனை நிரூபிக்க பொறுக்கியெடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது இது. ஒவ்வொரு புள்ளியிலும் தகர்ந்து விழும் கோட்பாடு இது.

‘(வேத இலக்கியத்தில் ஆரிய இனம் குறித்து சான்று உள்ளதா என்பது குறித்து ) என் முடிவுகள் பின்வருமாறு:

பின்வருமாறு:

1. வேதங்கள் ஆரியர் எனும் ஓர் இனத்தை அறியவில்லை.

2. ஆரிய இனம் என்ற ஒன்று படையெடுத்ததற்கோ அது இங்கிருந்த தஸ்யுக்கள் எனும் பூர்விக குடிகளை அடிமைப்படுத்தியதற்கோ எவ்வித சான்றுகளும் வேதத்தில் இல்லை.

3. ஆரிய/தஸ்யு வித்தியாசங்கள் இனரீதியிலானவை என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

4. வேதங்கள் ஆரியரும் தஸ்யுகளும் வெவ்வேறு தோல் நிறம் கொண்டவர்கள் என கருத இடம் தரவில்லை. பிராமணர்கள் ஆரியரெனில் தலித்துகளும் ஆரியரே. பிராமணர்கள் திராவிடர்களெனில் தலித்துகளும் அவ்வாறே

Categories: semmozhi

சங்க காலம் என்பது எப்போது?

டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி
FPN NEWS See full size image

கடந்த 1894 ஆம் ஆண்டில், தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் அவர்கள், சங்க இலக்கியமான  புறநானூற்றைப் பதிப்பித்தார். அந்த நூலில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களைப்பற்றிய செய்திகள் இருந்தன. பல மன்னர்களின் பெயர்களும் இருப்பதை வரலாற்று ஆசிரியர்கள் அறிந்தனர். ஆனால் அத்தகவல்களை உறுதிப்படுத்த வேறு சான்றுகள் கிடைக்காததால் அகில இந்திய அளவில் வரலாற்று ஆசிரியர்கள் அதிகமாக கண்டுகொள்ளவில்லை.

இந்நூல் வெளியாகி சுமார் நூறு ஆண்டுகளில் சதுர வடிவிலான செப்பு நாணயத்தின் மூலம் ஒரு முடிவு ஏற்பட்டது. 1984 ஆம் ஆண்டு நான் ஆய்விற்காக சில செப்புக்காசுகளை ஒரு மதுரை வணிகரிடம் வாங்கினேன். வாங்கிய காசு ஒன்றில் தமிழ் – பிராமி  எழுத்துமுறையில் “பெருவழுதி’ என்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. காசின் முன்புறம் நின்ற நிலையில் குதிரை ஒன்று இருந்தது. இக்காசைச் சங்ககால மன்னர் வெளியிட்டார் என்றும், சங்க இலக்கியத்தில் கூறப்பட்ட பெயர் காசிலும் இருக்கிறது என்பதும் உறுதியானது. இக்காசின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்று வரலாற்று ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தினர். இக்காசின் பின்புறம் கோட்டு வடிவுடைய மீன் சின்னமும் இருந்தது. ஆக பின்புறம், கோட்டு வடிவம் உள்ள காசுகள் அனைத்தும் சங்க காலப் பாண்டியர்கள் வெளியிட்டனர் என்பது உறுதியானது.

Wildass-oranger-horse

Wildass-oranger-horse

சென்ற நூற்றாண்டில் மதுரை மாவட்டம் போடி நாயக்கனூர் பகுதியில் வெள்ளிக்காசுகள் அடங்கிய புதையலை அரசு கைப்பற்றியது. அந்த புதையலில் இருந்த காசுகள் அனைத்தும் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் நாடு முழுவதும் வழக்கில் இருந்த வெள்ளி முத்திரைக் காசுகளைப் போல் இருந்தன. வரலாற்று அறிஞர் டாக்டர் கேஸாம்பி அவர்கள் இக்காசுகள் அனைத்தும் மவுரிய பேரரசின் இறுதிக்காலத்தில் அவர்கள் வழிவந்தவர்கள் வெளியிட்டிருக்கலாம் என்று எழுதினார். ஆனால் அக்காசுகளின் பின்புறத்தில் கோட்டு வடிவுள்ள மீன் சின்னம் மட்டும்தான் உள்ளது என்பதன் காரணமாக அக்காசுகளை சங்ககால பாண்டியர்கள்தான் வெளியிட்டிருக்க வேண்டும் என்று எழுதினேன். அக்கருத்தை இதுவரை யாரும் மறுக்கவில்லை.

இந்த ஆராய்ச்சி மூலம், சங்க கால இலக்கியங்கள் கி.மு. மூன்று அல்லது இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பதும், புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள மன்னர்களின் பெயர்கள், கற்பனையானவை அல்ல என்பதும் தெளிவாகிறது.

சங்க கால சேரர் காசுகள் :பாண்டியர்களைப் போல், சங்க கால சேர மன்னர்களும், காசுகள் வெளிட்டுள்ளனர் என்பது கரூர், அமராவதி ஆற்றங்கரையில் கிடைத்த காசுகள் மூலம் தெரியவந்துள்ளது. சங்க கால சேர மன்னர்களின் தலைநகரமாக கரூர் விளங்கியது. கிரேக்க, ரோமானிய மன்னர்களுடன் சேர மன்னர்கள் வர்த்தகத் தொடர்பு வைத்திருந்தனர். தென்னிந்தியாவில் மேற்கு கடற்கரையோரத்தில் அமைந்துள்ள முசிறி துறைமுகம் வழியே, வெளிநாட்டுப் பொருட்களின் ஏற்றுமதி, இறங்குமதி வர்த்தகம் நடைபெற்று வந்துள்ளது.சேர மன்னர்கள் வெளியிட்டுள்ள காசுகளில் ரோமானிய தாக்கம் உள்ள. செப்பு காசுகளை தற்போது பார்ப்போம்.

கொல்லிப்புறை காசு:கொல்லிப்புறை காசில் முன்புறம், ஒரு வீரர், அலங்கரிக்கப்பட்ட தோரண வாயிலில் நிற்கிறார். வலது கையில் கத்தி, நிலத்தில் குத்தியபடி உள்ளது. இடது கையை இடுப்பில் வைத்துள்ளார். அந்தக் கையில், தரையை தொட்டுக் கொண்டிருக்கும் ஒரு கேடயமும் உள்ளது. தொப்பி அணிந்துள்ளார். அவருடைய ஆடை, ரோமானிய உடையை ஒத்துள்ளது. இத்தோரணவாயிலைச் சுற்றி கொல்லிப்புறை என்ற பெயர் தமிழ் -  பிராமி எழுத்தில் பொறிக்கப் பட்டுள்ளது. காசின் பின்புறம், வில், அம்பு மற்றும் பிற சின்னங்கள் உள்ளன.

கொல்லிப்புறைக்காசு

கொல்லிப்புறைக்காசு

கொல்லிரும்புறை காசு:முந்தையக் காசுகள்  போலவே, கொல்லிரும்புறை காசின் முன்புறம், அலங்கரிக்கப்பட்ட தோரண வாயிலின் முன், ஒரு வீரர் நின்று கொண்டிருக்கிறார். அவர் வலது கையில் ஒரு கத்தி; இடது கையை இடுப்பில் வைத்துள்ளார். ஒரு தொப்பி அணிந்துள்ளார். இவருடைய ஆடை, ரோமானிய உடையை ஒத்துள்ளது.இந்த சின்னத்தைச் சுற்றி தமிழ் – பிராமியில், “கொல்லிரும்புறை’ என்ற பெயர், இடது புறத்திலிருந்து வலது புறத்தை நோக்கி, வளைந்து எழுதப்பட்டுள்ளது. காசின் பின்புறம், ஒரு வில்லும், அம்பும், மற்ற சின்னங்களுடன் காணப்படுகிறது.இந்த இரு காசுகளின் முன்புறமும் நின்றிருக்கும் வீரர் சின்னங்கள், மன்னர் அகஸ்டஸ் மற்றும் அவருக்குப் பிந்தைய மன்னர்கள் வெளியிட்ட காசுகளில் காணப்படும் சின்னங்களை ஒத்துள்ளன.

அகஸ்டஸ் காசு 27-128

அகஸ்டஸ் காசு 27-128

கி.மு. 27 முதல் கி.பி. 128 வரை ஆண்ட ரோமானிய பேரரசர்கள் அகஸ்டஸ், டைபீரியஸ், நீரோ மற்றும் ஹத்ரியன் ஆகியவர்கள் வெளியிட்ட காசுகளின் பின்புறம், இரண்டு அல்லது நான்கு தூண்கள் கொண்ட தோரண வாயிலில் ஓர் உருவம் நிற்பது போன்ற சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த காசுகள் பெரும்பாலானவற்றில், அந்த உருவம் பேரரசரின் உருவமாக கருதப்படுகிறது.

இந்த காசுகளில் உள்ள சின்னங்களைப் போலவே, கொல்லிப்புறை மற்றும் கொல்லிரும்புறை ஆகிய சேர மன்னர்கள், தாங்கள் வெளியிட்ட காசுகளில் உருவங்கைள பதித்திருக்கின்றனர். இரண்டு தூண்கள் சின்னம் கொண்ட காசுகளை அகஸ்டஸ் பேரரசர் வெளியிட்டுள்ளார். சேர மன்னர்கள் வெளியிட்ட காசுகளிலும், இரண்டு தூண்கள்தான் உள்ளன. எனவே, இந்த இரு மன்னர்கள் வெளியிட்ட காசுகள் கி.பி. முதலாம் நூற்றாண்டை சேர்ந்தவை என நான் கருதுகிறேன்.

மாக்கோதை மற்றும் குட்டுவன் கோதை காசுகள்:சங்க கால சேரர்கள், வெள்ளி காசுகளும் வெளியிட்டுள்ளனர். தமிழ் – பிராமி எழுத்தில், மாக்கோதை என்று எழுதப்பட்ட காசு ஒன்றை நான் கண்டுபிடித்துள்ளேன். தலையில், ரோமானிய தலைக்கவசத்தை மன்னர் அணிந்து இருக்கலாம் என கருதுகிறேன். காசின் பின்புறம், எந்த சின்னமும் பொறிக்கப்படாமல், வெற்றாக உள்ளது.

மாக்கோதை - முன்புறம்

மாக்கோதை – முன்புறம்

என்னிடம் உள்ள மாக்கோதை காசுகளில் ஒன்று, வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தேன். இந்தக்காசு, அது வெளிவந்த காலம் மற்றும் உலோகம் குறித்து சில தகவல்களை தந்தது. அந்தக் காசின் முன்புறம், மன்னர் கழுத்தின் கீழ் நான்கு சிறிய ஆங்கில எழுத்துக்கள் இருந்தன. ரோமானி காசுகளில் காணப்படும் எழுத்துக்களின் சிதைந்த வடிவமாக அவை தோன்றின. காசின் பின்புறம், இரண்டு உருவங்கள் நிற்பது போன்ற வரைவுகள் காணப்பட்டன.

கவனமாக ஆராய்ந்தபோது, அவை ஏற்கனவே, அகஸ்டஸ் வெளியிட்ட வெள்ளி காசை உருக்கி, அக்காசின் மேல் மறு அச்சு பதிந்து மாக்கோதையின் காசை உருவாக்கினர் என்பதை உணர்ந்தேன். பேரரசர் அகஸ்டஸ் வெளியிட்ட வெள்ளிக் காசின் முன்புறத்தில் அகஸ்டஸின் உருவமும், பின்புறம், அவருடைய பேரன்கள் கையஸ் மற்றும் லூசியஸ் ஆகியோர் நிற்பது போலவும் பொறிக்கப்பட்ட வெள்ளி காசை பயன்படுத்தியதால் மாக்கோதை காசுகள் உருவாகின என்பதை உணர்ந்தேன். இதுகுறித்து 1998ல், தென்னிந்திய நாணயங்கள் குறித்த ஆண்டுவிழா மலரில் கட்டுரை வெளிவந்துள்ளது.

அகஸ்டஸ் காசு

அகஸ்டஸ் காசு

அகஸ்டஸ் வெள்ளிக் காசில் சூடு ஏற்றி, காசின் விளிம்புப் பகுதிகளை வெட்டி விட்டு சூடேற்றிய காசை பிடிப்புள்ள அச்சின் மேற்பகுதியில் வைத்து, அக்காசின்மேல் மாக்கோதை காசின் அச்சைப் பொருத்தி பலமாக அடிக்கும்போது அந்த மாக்கோதை அச்சின் சின்னம் அகஸ்டஸ் வெள்ளிக் காசில் பதிவாகிறது. பொதுவாக, அதிக சூட்டில் ஒரு காசை மறு அச்சு செய்யும்போது, முந்தைய சின்னங்கள் முற்றிலும் அழிந்து, புதிய சின்னமே ஏறும். காசை போதுமான அளவு சூடேற்றாமல் அச்சிட்டால், பழைய சின்னங்கள் சில, அப்படியே தங்கிவிடும்.

மாக்கோதை

மாக்கோதை

மேற்கண்ட காசு, சரியாக சூடேற்றப்படாத காசாக, புது சின்னங்களுடன், பழைய சின்னங்களும் சேர்ந்து காணப்படுகிறது. அகஸ்டஸ் காசின் மீது மறு அச்சிற்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு அச்சுகளில் ஒன்று மாக்கோதை தலையுடைய அச்சு முன்புறமும், மற்றொன்று வெற்றாக பின்புறமும் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ரோமானிய மன்னர்கள் வெளியிட்ட காசுகளுக்கு அதிக கிராக்கி இருந்தது. அதுவும், அகஸ்டஸ் மற்றும் டைபீரியஸ் காசுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதன் மூலம், கி.மு. 2ம் ஆண்டு முதல் கி.பி. 4ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், சேர மன்னர் மாக்கோதை நாணயம் வெளியிட்டுள்ளார் என்று தெரிகிறது. அதேபோல், குட்டுவன் கோதையும் காசு வெளியிட்டுள்ளார். இதிலும் ரோமானிய தாக்கம் தெரிகிறது. இந்த காசு கி.பி.100 முதல் 200 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வெளியிட்டிருக்கலாம் என்று தெரிய வருகிறது. இவை தவிர, அதியமானின் மோதிரம் ஒன்றை, கரூரிலிருந்து நான் வாங்கினேன். அந்த மோதிரத்தில், தமிழ் பிராமியில் ஐந்து எழுத்துக்கள் உள்ளன. மோதிரத்தில் இருக்கும் அந்த பெயரை அதியமான் என்று காலம் சென்ற தொல் எழுத்தறிஞர் கே.ஜி.கிருஷ்ணன் அவர்கள் படித்துரைத்திருக்கிறார். இந்த மோதிரம் கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்ததாகத் தெரிகிறது.

மோதிரத்தில் பிரம்மி எழுத்துகள்

மோதிரத்தில் பிரம்மி எழுத்துகள்

மேலே குறிப்பிட்ட காசுகள் மற்றும் மோதிரத்தின் வாயிலாக, சங்க கால இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மன்னர்கள் கற்பனைப் பாத்திரங்கள் அல்ல என்பது தெளிவாகிறது.

ரோமானிய காசுகளின் காலம் தெளிவாக தெரிந்ததால், அதை ஒத்துள்ள சேர காசுகளும் அக்காலத்தைச் சார்ந்தவையே என்பதும் தெளிவாகிறது.சங்க கால சேர நாணயங்களில் உள்ள சில இலச்சினைகளை வைத்தும் ரோமானிய பேரரசர் ஆகஸ்டஸ் வெளியிட்ட சில நாணயங்களின் பின்புறம் காணப்படும் சில இலச்சினைகளை ஒப்பிட்டும் சங்க காலத்தை கணித்தும், தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி, கோவையில் நடந்த உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் 26.6.2010 அன்று படித்த கட்டுரையின் தமிழாக்கம்.

Categories: semmozhi

சிந்து சமவெளி திராவிடர்களின் கடவுள் முருகர் : பேராசிரியர் அஸ்கோ பர்போலா ஆய்வு கட்டுரையில் தகவல்

கோவை : சிந்து சமவெளி எழுத்துக்களை ஆய்வு செய்ததில், முருகன், ஆரிய கடவுள் ருத்ரா -ஸ்கந்தா ஆகியோர் திராவிடர் வணங்கிய கடவுள்களாக இருந்தார்கள் என்று ஆய்வில் தெரியவருகிறது, என்று “செம்மொழி தமிழ்’ விருது பெற்ற பின்லாந்து பேராசிரியர் அஸ்கோ பர்போலா சிந்துசமவெளி எழுத்துக்கள் குறித்து ஆய்வு கட்டுரையில் கூறியுள்ளார்.

கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் வெளிநாட்டு அறிஞர்கள், பேராசிரியர்கள் பங்கேற்று, தமது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்கின்றனர். பின்லாந்து நாட்டை சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலா, சிந்து சமவெளி நாகரிகம், திராவிடர்களின் நாகரிகம் பற்றி ஆய்வு செய்து வருகிறார். இவருக்கு மாநாட்டு முதல் நாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் “செம்மொழி தமிழ்’ விருது வழங்கினார். இவர் “சிந்து சமவெளி எழுத்துக்களுக்கான திராவிட தீர்வு’ என்ற தலைப்பில் 35 பக்கம் ஆங்கிலத்தில் எழுதிய ஆய்வுக் கட்டுரையை, முதல்வர் கருணாநிதி முன்னிலையில் மாநாட்டில் சமர்ப்பித்தார்.

அவர் தமது ஆய்வு குறித்து பேசியதாவது:  சிந்து சமவெளி நாகரிகம் நிலவிய ஹரப்பா பகுதியில், 1870 மற்றும் 1890ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், எந்த மொழி என்று அறிதியிட்டு கூற முடியாத, கற்களில் பொறிக்கப்பட்ட எழுத்து வடிவங்கள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் அகழாய்வு செய்ததில் மெசபடோமியா பகுதியில் பல எழுத்து வடிவங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதன் அடிப்படையில் சிந்து சமவெளி நாகரிக காலம் கி.மு. 2600 -1900 என்பதை ஆய்வுகள் மூலம் உறுதியானது. இக்கல்வெட்டு, எழுத்துக்கள் வளைகுடா கடல் வாணிபர்களால் அந்த பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்களால் அந்த எழுத்துக்களை புரிந்து கொள்வதில் சிரமம் இருந்துள்ளது.
சிந்து சமவெளி நாகரிகம் அழிந்தபோதே, சிந்து சமவெளி எழுத்து வடிவங்கள் சேர்ந்து அழிந்து விட்டது. ஆனாலும் பாதுகாக்கப்பட்ட சில எழுத்து வடிவங்கள் ஆய்வுக்கும், ஹரப்பாவில் பயன்படுத்தப்பட்ட மொழியினை அறிய உதவுவது திராவிட மொழிகளேயாகும், அவற்றின் மூலம் பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது. மத்திய மற்றும் தென்னிந்தியாவில் 26 திராவிட மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. எனினும், கி.மு. 1100 -600ம் ஆண்டுகளில், வடமேற்கு பகுதியில் காணப்பட்ட இந்தோ-ஆரிய உருவ வடிவ எழுத்துக்களில்,முகம்,பலம், காணா, கியாம்பு ஆகிய திராவிட மொழி எழுத்துக்கள் இருப்பதை அறிய முடிகிறது.

வரலாற்று மொழிகள் வாயிலாக நாம் அறிய முடிவது என்னவென்றால், சிந்து சமவெளி பகுதி மக்கள் (ஹரப்பா) திராவிட மொழியைத்தான் பேசியிருக்க வேண்டும் என்று தெரியவருகிறது. சிந்து சமவெளி மதங்களை பற்றி படிக்க பழந்தமிழ் இலக்கியங்கள் உதவிக்கு வருகின்றன. போர் மற்றும் காதலில் சிறந்து விளங்கிய “இளமை’ கடவுளை வணங்கினர். அக்கடவுள் வடஇந்தியர்கள் வணங்கிய போர்க்கடவுளான “ஸ்கந்தா’வோடு ஒத்து காணப்படுகிறது. அக்கடவுளுக்கு இளமை, இளைஞன் எனும் பொருள்பட முருகு அல்லது முருகன் என்ற திராவிட பெயர்கள் வழங்கப்பட்டன.  வேதங்களில் ஸ்கந்தாவுக்கு முன்னோராக குறிப்பிடப்படும் “ருத்ரா’ என்னும் கடவுள், பச்சிளங்குழந்தையாக உருவாக்கப்பட்டும், சமஸ்கிருதத்தில் “குமாரா’ என்றும் அழைக்கப்படுகிறார். முருகனும், ஸ்கந்தாவும், சிவப்பு நிறம் அல்லது உதிக்கும் சூரியன் எழுத்துவடிவ குறியீடுகளால் குறிப்பிடப்படுகிறார்கள். இதன் மூலம் திராவிட கடவுள் முருகன் மற்றும் ஆரிய கடவுள் ருத்ரா-ஸ்கந்தா ஆகியோர், திராவிடர் வணங்கிய கடவுள்களாக இருந்தார்கள் என்று தெரியவருகிறது.  சிந்துசமவெளி நாகரிக காலத்தைய எழுத்து வடிவங்கள் திராவிட மொழியே பின்னணியில் உள்ளதை தெளிவாகி உறுதியுடன் கூறமுடிகிறது. உருவக எழுத்துக்களின் அர்த்தங்களை கண்டுபிடிக்க, திராவிட மொழியாற்றல் மிக்க பேச்சாளர்கள் தேவையில்லை. இந்திய கலாசாரம் மற்றும் தெற்காசிய தன்மையை பற்றி நன்கு அறிந்திருந்தாலே போதும். இவ்வாறு பேராசிரியர் பர்போலோ பேசினார்.  இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஸ்டாலின் உட்பட தமிழறிஞர்கள் பங்கேற்றனர்.

Categories: semmozhi

பக்திக்கு ஒரு மொழி தமிழ் மட்டுமே : பொன்னம்பல அடிகள் பெருமிதம்

கோவை : “”ஜாதி, சமயற்ற இலக்கியங்களை கொண்டுள்ள மொழி தமிழ்,” என்று செம்மொழி மாநாட்டில் நேற்று நடந்த கருத்தரங்கில், குன்றக்குடி பொன்னம்பல அடிகள் பேசினார்.

உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மூன்றாவது நாளான நேற்று, “செம்மொழி தகுதி’ என்ற தலைப்பில், கருத்தரங்கு நடந்தது. பேராசிரியர் வ.செ.குழந்தைசாமி தலைமை வகித்தார். துவக்க உரையில், கவிஞர் மன்னர் மன்னன் பேசியதாவது: செவ்விய இலக்கியத்தை உடைய மொழியை, “செம்மொழி’ எனப் போற்றுகின்றனர். செவ்விய இலக்கியம் உள்ள மொழியில், தொன்மை, வளமை, இலக்கிய செழிப்புகள் இருக்க வேண்டும். இத்தகைய தொன்மையும், வளமையும் உள்ள உலக மொழிகள் இரண்டு மட்டுமே. இவை, சீன, இந்திய மொழிகள் தான். இந்த மொழிகள், 6000ம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகவே கருதுகின்றனர். இந்திய மொழிகளில் தொன்மை வாய்ந்த மொழியாக தமிழ் உள்ளது. இலக்கிய வளம் வாய்ந்தததாகவும் தமிழ் உள்ளது. இதற்கு சான்றாக, தமிழ் மொழியில், 475 சங்க கால இலக்கியங்கள் உள்ளன. கி.மு.,200 முதல் கி.பி.,400 ஆண்டுகளுக்கு இடையில் தமிழ் கவிஞர்களால் இயற்றப்பட்ட பல இலக்கியங்கள் இதுவரை அழியாமல் புகழ் பெற்றதாக உள்ளது. 400 ஆண்டுகளில், 500 கவிஞர்கள் எழுதிய இலக்கிய தரம் இதுவரை அழியவில்லை. நிலைத்து நிற்கிறது. நான்கு வகை இலக்கியங்கள், பழமையானவையாக உள்ளன. இத்தகைய இலக்கணம், எந்த மொழிக்கும் கிடையாது. எந்த மொழியிலும் இலக்கியம் இவ்வளவு தொன்மை வாய்ந்ததாக இல்லை.

தமிழ் மொழி, மூன்று மொழிக்கு தான் தாய்மொழியாக இருப்பதாக அறிந்தனர். தமிழ் மொழி வரலாற்றில், தமிழ், மலையாளம், தெலுங்கு போன்றவற்றின் தாய்மொழியாக இருப்பதாக, பார்போன் என்ற ஆராய்ச்சியாளர் தெரிவித்திருந்தார். 1856ம் ஆண்டில், தமிழ், ஒன்பது மொழிகளுக்கு தாய்மொழியாக இருப்பதாக தெரிவித்தனர். 1900ம் ஆண்டில், இது 14 மொழிகளுக்கு தாய்மொழி என அறிந்தனர். 1960களில், 30 மொழிகளின் தாய்மொழியாக இருக்கும் என தெரிவித்தனர். சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ் மொழி, தனி குடும்பத்தை கொண்டிருப்பதாக பின்னர் வந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தற்போதைய ஆய்வுகளில், கொரியா, ஜப்பானிய, ஜெர்மனிய மொழிகளை ஒத்திருப்பதால், “தமிழ் மொழியிலிருந்து, இம்மொழிகள் தோன்றியிருக்குமோ’ என்ற ஐயத்துடன் ஆய்வுகள் துவங்கியுள்ளன. அவ்வாறு இருக்குமானால், உலக மொழிகளுக்கு எல்லாம், தாய்மொழியாக தமிழ் இருக்கும். இவ்வாறு கவிஞர் மன்னர் மன்னன் பேசினார்.

“பண்பாட்டு கொடையில்’ என்ற தலைப்பில், வளனரசு பேசுகையில்,”"தமிழ் சிறந்த விருந்தோம்பல் பேராண்மை கொண்டதாக உள்ளது. கடலில் கிடைக்கும் சங்கு, ஆயிரத்தில் ஒன்று வலம்புரி சங்காக இருக்கும். இதை காதில் வைத்து கேட்டல் மூலம் அறிய முடியும். வலம்புரி சங்கு நூறில் ஒன்று, ஓசை உடையதாக இருக்கும். இதை “சலம்சலம்’ என அழைக்கின்றனர். உலகத்தில் ஒரே சங்கு, பஞ்சசன்யம் என அழைக்கின்றனர். இவ்வாறு, பல்வேறு வகைகளை வகைப்படுத்திய பெருமை ,தமிழ் மொழியில் உள்ளது. “கப்பலை’ குறிக்கும் சொல்லாக, 25 பெயர்கள் தமிழில் உண்டு.
இவ்வாறு வளனரசு பேசினார்.

“இலக்கிய செழுமையில்’ என்ற தலைப்பில், பேராசிரியர் அழகப்பன் பேசியதாவது: இலக்கிய அமைப்புக் கொண்ட தொன்மை மொழியாக தமிழ் மொழி உள்ளது. இந்திய அளவில் 13 மொழிகளில் ஒன்றாக இருந்த தமிழ் மொழியை, செம்மொழியாக அறிவிக்கச் செய்து, முதல் இடத்திற்கு கொண்டு வந்த பெருமை முதல்வருக்கு உண்டு.  செழுமை என்ற சொல்லுக்கு, நிறைவு, மாட்சி, செல்வச் செழிப்பு என்ற பொருள் உண்டு. இத்தகைய செழுமையான பண்பு, தமிழ் மொழிக்கு உண்டு. சங்க கால இலக்கியங்கள், 2,381 உள்ளன. இவற்றில், அகம் சார்ந்தவை 1,862; புறம் சார்ந்தவை 1,019. சங்கப்புலவர்கள் 409 பேர் இருந்தனர். நில வகைப்படுத்தல், தமிழ் மொழியில் மட்டுமே உள்ளது. பாலை, நெய்தல், மருதம் உள்ளிட்ட நான்கு இலக்கிய கட்டமைப்புகள் தமிழ் இலக்கியத்தில் உண்டு.  தமிழை கோவிலாக கருதினால், அதில் அடித்தளமிடும் நான்கு இலக்கியங்கள். நுழைவு வாயிலாக 45 இலக்கியங்களை தொல் காப்பியம் கொண்டிருக்கும். மேல்நிலை மாடமாக பல்வேறு நூல்கள் உள்ளன. சங்க கால இலக்கியம், நீதி நூல்கள் போன்ற நூல்கள் இடம் பெற்றுள்ளன. நீதி நூல்களில் திருக்குறள் பெரும் திறம் வாய்ந்தது. சைவ சித்தாந்தம், தனிப்பாடல், இஸ்லாமிய இலக்கியங்கள் உள்ளிட்ட பல, தமிழுக்கு அணி சேர்க்கின்றன. இயல் இசை நாடகம், நாட்டுப்புறவியல் போன்றவை கோபுரத்தில் பொம்மைகளாக திகழ்கின்றன.  இவ்வாறு பேராசிரியர் அழகப்பன் பேசினார்.

“உலகப்பொதுமையில் செம்மொழி தகுதி’ என்ற தலைப்பில், பேராசிரியர் இளம்பிறை மணிமாறன் பேசியதாவது: தமிழ் நூல்களில் பெரும்பாலானவை, “உலகம்’ என்பதிலே துவங்குகிறது. உலகை நோக்கி, தமிழ் மொழி வளர்ச்சி பெற்று வருகிறது. உலக நில வகைகளை ஐந்து பிரிவாகவும், வாழ்க்கையை அகம்-புறம் என இரு பிரிவுகளாகவும் பிரித்துள்ளது தமிழ் மொழி. மேல்நாட்டு அறிஞர்கள் கூறாத கருத்துக்கள் கூட, தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு, இளம்பிறை மணிமாறன் பேசினார்.

இதையடுத்து, “இலக்கண செப்பத்தில் செம்மொழி தகுதி’ என்ற தலைப்பில், பேராசிரியர் இலக்குவனார் மறைமலை பேசுகையில்,”"உலக மொழிகளில் குறைந்த எழுத்துக்களை கொண்ட மொழியாக தமிழ் உள்ளது. 30 எழுத்துக்கள் மட்டுமே தமிழ் மொழியில் உள்ளன. இதை தொடர்ந்தே எழுத்துக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரு பாலரையும் குறிக்கும் பொதுவான சொல், தமிழ் மொழியில் மட்டுமே உண்டு. ஆண், பெண் இரண்டையும் “ஒருவர்’ என குறிப்பிடும் பண்பு, தமிழ் மொழிக்கே உள்ள சிறப்பு,” என்றார்.

“தொன்மை’யில் செம்மொழித்தகுதி என்ற தலைப்பில் பொன்னம்பல அடிகள் பேசியதாவது: ஒவ்வொரு மொழிக்கும் ஒரு மொழிச் சிறப்பு உண்டு. வணிகத்திற்கு ஆங்கிலமும், காதலுக்கு இத்தாலியும், தத்துவத்திற்கு ஜெர்மனியும் போல, பக்திக்கு ஒரு மொழி என்றால், அது தமிழ் மட்டுமே. முன் தோன்றிய தமிழ் இலக்கியங்களில், ஜாதி, சமயங்கள் இல்லை. ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது தொல்காப்பியம். இலக்கணம் 10 ஆயிரம் ஆண்டுக்கு முன் தோன்றியதாக இருக்க வேண்டும். இங்கு தோன்றிய நாகரீகங்கள், பல சர்வதேச அளவில் தோன்றிய நாகரீகங்களுடன் தொடர்புள்ளவையாக உள்ளன. வரலாற்று இலக்கியங்களில், வெவ்வேறு நகரங்களில் தொடர்புள்ளவையாக இவை உள்ளன. இவ்வாறு பொன்னம்பல அடிகள் பேசினார்.

Categories: semmozhi

சங்ககால தமிழ் இலக்கியங்கள் இயற்றியது எந்த நூற்றாண்டில்

: கலந்தாய்வரங்கில் விவாதம்
ஜூன் 26,2010,23:02
கோவை : “”அச்சுத்துறை தமிழ் மொழிக்கு பாதுகாப்பாகவும், ஆவணமாகவும், பிரசாரமாகவும் இருக்கிறது. அதனால், தமிழ் வளர்க்கும் பெரும் பொறுப்பு அச்சுத்துறைக்கே உள்ளது” என, பட்டிமன்ற விவாத நிறைவில் பேராசிரியர் சாலமன் பாப்பையா தீர்ப்பு கூறினார்.

கோவையில் நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் நான்காவது நாளான நேற்று நிறைவு நிகழ்ச்சியாக, “தமிழ் வளர்க்கும் பெரும் பொறுப்பு’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. புதுச்சேரி முதல்வர் வைத்தியலிங்கம் பட்டிமன்றத்தை துவக்கி வைத்து பேசினார். பேராசிரியர் சாலமன் பாப்பையா நடுவர் பொறுப்பு வகித்து பேசியதாவது: தமிழ் மொழி பழமை வாய்ந்தது, தமிழில் இல்லாத சிறப்புகளே இல்லை. தமிழை பேசினால் இனிக்கும், காது குளிர கேட்டால் மணக்கும். அத்தகைய பெருமையும், தொன்மையும் நிறைந்த செம்மொழித் தமிழ் மாநாடு பட்டிமன்றத்தில் தமிழ் வளர்க்கும் பெரும் பொறுப்பு யாருக்கு என்ற தலைப்பில் பட்டிமன்றம். தமிழ் வளர்ச்சிக்கு அச்சுத்துறை தான் முதலில் தடம் பதித்தது. அதன்பின், வெள்ளித்திரையில் தமிழ் புகுத்தப்பட்டது. வெள்ளித்திரையில் உமைப்படத்தில் துவங்கி கருப்பு வெள்ளை படமாகி, தொழில்நுட்ப வளர்ச்சி பெற்று நெடுந்தொலைவு வளர்ந்துள்ளது. இறுதியாக சின்னத்திரை அனைத்தையும் ஆக்கிரமித்து ஆட்சி செய்கிறது. இதில், எது தமிழ் வளர்க்க பெரும் பொறுப்பு வைக்கிறது என்பதற்கு விவாதத்திற்கு பிறகு தீர்வு காண்போம்.

பாரதிராஜா (வெள்ளித்திரைக்கே): தமிழக முதல்வர் அச்சுத்துறையில் பணியாற்றி பல புரட்சி கருத்துகளை எழுதியவர். அவரது கதைவசனத்தில் உருவான படங்கள் மூலம் வெள்ளித்திரையில் தமிழ் காலூண்றியது. ஓலைச்சுவடிகளில் இருந்து எழுத்துகளை கதைகளாக்கி, திரைப்படம் எடுத்து மக்களுக்கு தமிழ் சென்றடைய வெள்ளித்திரை சேவை செய்தது. வெள்ளித்திரையில் தமிழ் ஆதிக்கம் ஏற்பட்ட பிறகே தமிழ் மொழிக்கு விடிவு கிடைத்தது. திரைத்துறையில் இருந்த கலப்பு மொழித்தமிழுக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழ் வளர்ந்துள்ளது.

லியோனி (வெள்ளித்திரைக்கே): திரைத்துறை சாதித்தது நிறைய இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. வெள்ளித்திரையின் குழந்தை தான் சின்னத்திரை. சின்னத்திரை வீடு தேடி வந்து விற்கப்படும் பொருள். ஆனால், வெள்ளித்திரை வெளியில் தேடிச் சென்று வாங்கி சாப்பிடும் பொரும். மக்களின் வீடு தேடி வரும் சின்னத்திரையே தமிழ் வளர்க்க பெரும் பங்காற்றுகிறது.

கிருஷ்ணன் (அச்சுத்துறைக்கே): அச்சுத்துறையை அடிப்படையாக கொண்டே வெள்ளித்திரை, சின்னத்திரைகள் இயங்குகின்றன. தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் கிடைத்துள்ளதற்கு காரணமே அச்சுத்துறைதான். பழங்கால ஓலைச்சுவடி ஆவணங்களை அச்சுவடித்தில் ஆவணமாக்கி பாதுகாக்கப்பட்டுள்ளது. சிறுகதை, குறுநாவல், தொடர் கதைகள் வெள்ளித்திரையில் படமாக வருவதற்கு காரணமே அச்சுத்துறைதான். வெள்ளித்திரை, சின்னத்திரையை பாதுகாப்பது அச்சுத்துறைதான். 200 ஆண்டுகள் பழமையான அச்சுத்துறையில் தமிழ் வரிவடிவத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. அச்சுத்துறை தொடர்புடைய தமிழ் இணையதளத்தின் மூலம் உலகத்திலுள்ள தமிழர்களும் தமிழ் படிக்க முடிகிறது. தமிழ் வளர்ச்சிக்கு எது ஆதாரமாக இருக்கிறதே, அந்த துறைக்கு தான் கூடுதல் பொறுப்புள்ளது.

சந்திரசேகர் (வெள்ளித்திரைக்கே): கடந்த 1913ல் இந்தியாவில் திரைத்துறை அறிமுகமானது. மெல்ல வளர்ந்து நவீன தொழில்நுட்பத்தின் உச்சியில் உள்ளது. இருட்டில் இருந்து தமிழ், வெள்ளித்திரையில் முதல்வரின் கதைவசனத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. எழுத, படிக்க தெரியாத பாமர மக்கள் திரைப்படங்களை பார்த்தே தமிழ் கற்றனர். அதனால், தமிழ் வளர்க்கும் பெரும் பொறுப்பு வெள்ளித்திரைக்கே உள்ளது.

எஸ்.வி.சேகர் (சின்னத்திரைக்கே): சின்னத்திரையில் வரும் விளம்பரங்களாலே திரைப்படங்கள் வியாபாரமாகிறது. சின்னத்திரையால் சிறுவர் முதல் அனைவரும் தமிழ் கற்க முடிகிறது. சின்னத்திரையில் வரும் சம்பவங்கள் மக்கள் மனதில் பதிகிறது. செம்மொழி மாநாட்டு பாடல் சின்னத்திரையில் ஒளிபரப்பப்பட்டதால் பட்டி தொட்டியெல்லாம் பரவியுள்ளது. வீட்டுக்கு ஒரு இலவச தொலைக்காட்சி வழங்கியுள்ளதால், தமிழ் வளர்க்கும் சக்தி சின்னத்திரையிடம் மட்டுமே உள்ளது.

நக்கீரன் ஆசிரியர் கோபால் (அச்சுத்துறைக்கே): செம்மொழி மாநாட்டு சின்னத்தில் ஓலைச்சுவடியில் அச்சாணியில் எழுதுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அச்சுத்துறையின் முக்கிய பங்கை முதல்வரே உணர்த்தி விட்டார். அவ்வப்போது கிடைக்கும் புதைபொருள் செப்புத்தகடுகள் அச்சுத்துறையின் அழியா தன்மை வெளிப்படுத்துகின்றன. திரைப்படங்கள் மக்களை தவறான பாதைக்கு இழுத்து செல்கின்றன. சின்னத்திரையில் தமிழ் வளர்ச்சிக்கான நிகழ்ச்சிகளே இல்லை. மொழி என்றால் இலக்கணம், கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். அச்சுத்துறையில் மட்டுமே இலக்கணத்தை இடம் பெறச் செய்ய முடியும். அதனால் அச்சுத் துறை மட்டுமே தமிழ் வளர்ச்சிக்கு ஊன்று கோலாக உள்ளது.

பட்டிமன்றத்தில் நிறைவாக சாலமன் பாப்பையா பேசியதாவது: பாமரனுக்கும் தமிழை கொண்டு சேர்த்த பொறுப்பு வெள்ளித்திரைக்கு உள்ளது. ஆனால், வெள்ளித்துறையில் ஆங்கில ஆதிக்கமே அதிகமுள்ளது. அரசு மானியம் பெற தமிழில் பெயர் வைக்கின்றனர். தமிழ் பண்பாட்டை பரப்புவதை விட, வெளிநாட்டு கலாச்சாரமே வெள்ளித்திரையில் இடம் பெறுகிறது. சின்னத்திரையில் திரைப்படம், ஆரோக்கியம், இலக்கியம், நாட்டு நடப்புகள் அனைத்தும் உள்ளது. ஆனால் சின்னத்திரையும், வெள்ளித்திரையும் பதிவுகள் செய்வதில்லை. நாட்டு நடப்புகளை ஆவணமாக பதிவு செய்வது அச்சுத்துறை மட்டுமே. தமிழை பாதுகாத்து, ஆவணமாக வைத்திருக்க அச்சுத்துறை பங்காற்றியுள்ளது. வெள்ளித்திரை, சின்னத்திரை பற்றி விமர்சனம் செய்யும் தகுதி அச்சுத்துறைக்கு மட்டுமே உள்ளது. அச்சுத்துறை வளர்ச்சி பெற்று வலை தேடல் வரையிலும் விரிந்துள்ளது. இதற்கெல்லாம் மேலாக ஜனநாயகத்தின் நான்காவது தூணாக அச்சுத்துறை உள்ளது.
தமிழ் வளர்க்க இந்த மூன்று துறையும் பங்காற்றியுள்ளதையும் மறுக்க முடியாது. தமிழை வளர்க்கவும், பாதுகாக்கவும் இவை மூன்று முப்படையாக உள்ளது. சின்னத்திரை கப்பல் படையாகவும், வெள்ளித்திரை விமானப்படையாகவும், இவற்றை இணைத்து போர் தொடுக்கும் தரைப்படையாக அச்சுத்துறை உள்ளது. அச்சுத்துறை தமிழ் மொழிக்கு பாதுகாப்பாகவும், ஆவணமாகவும், பிரசாரமாகவும் இருக்கிறது. அதனால், தமிழ் வளர்க்கும் பெரும் பொறுப்பு அச்சுத்துறைக்கே உள்ளது. இவ்வாறு, சாலமன் பாப்பையா தீர்ப்பு கூறினார்.

பட்டிமன்ற துளிகள்…

Categories: semmozhi

தமிழர் வாழ்வை சார்ந்திருப்பது சங்க இலக்கியம்தான்



தமிழர் வாழ்வை சார்ந்திருப்பது சங்க இலக்கியம்தான் : செம்மொழி மாநாட்டு பட்டிமன்றத்தில் தீர்ப்பு
ஜூன் 25,2010,14:36
கோவை : தமிழர் வாழ்வை சார்ந்திருப்பது சங்க இலக்கியம்தான் என்று செம்மொழி மாநாட்டையொட்டி நடந்த பட்டிமன்ற விவாதத்தின் முடிவில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

கோவையில் நடைபெற்று வரும் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி, “தமிழர் வாழ்வோடு பெரிதும் சார்ந்திருப்பது சங்க இலக்கியமே! இடைக்கால இலக்கியமே! இன்றைய இலக்கியமே!’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. குமரி அனந்தன் பட்டிமன்றத்தை துவக்கி வைத்தார். பேராசிரியர் சத்திய சீலன் தலைமையில் நடந்த இந்த பட்டிமன்றத்தில், “சங்க இலக்கியமே’ எனும் கருத்தை ஆதரித்து இலங்கை ஜெயராஜ், முனைவர் சுந்தர ஆவுடையப்பனும், “இடைக் கால இலக்கியமே’ என்ற கருத்தை ஆதரித்து அறிவொளி மற்றும் தேச மங்கையர்க்கரசியும், “இன்றைய இலக்கியமே’ என்ற கருத்தை ஆதரித்து பேராசிரியர் அரங்க மல்லிகா மற்றும் தென்னவன் ஆகியோரும் வாதாடினர்.

பேராசிரியர் சத்திய சீலன் பேசுகையில்,  “”உலக தமிழர்கள் அனைவரும் பெருமை படும் நாள் இது. தமிழ் மொழி வளர்ச்சி பெற்றால் தமிழனுக்கு நல்லது. சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரை படித்தவர் நமது முதல்வர். உலகில் வேறு எந்த மொழியிலும் பட்டிமன்ற கலாச்சாரம் இல்லை. தமிழனுக்கே உரியது பட்டிமன்றம். அல்லாததை விலக்கி எறிவதும் நல்லதை ஏற்பதும் தமிழனின் பண்பு,” என்றார்.

சங்க இலக்கியமே (இலங்கை ஜெயராஜ்): மன்னர்களை புகழ்ந்து பாடி இரந்து வாழ வேண்டிய அவல நிலை உள்ளதே என்ற புலவர்களின் நிலையை அறிந்த தமிழ்த்தாய், புலவனையே தமிழகத்தின் அரசனாக்கி இருக்கிறாள். எவர் என்ன தீமை செய்தாலும் தமிழினத்தை அழிக்க முடியாது.  சிலப்பதிகாரம், திருக்குறள், கம்ப ராமாயணம் இந்த உலகில் இருக்கும் வரை தமிழினத்தையும் தமிழர்களையும் அழிக்க முடியாது என்றார் பாரதிதாசன். ஆகவே சங்க இலக்கியம் மூலம்தான் தமிழ் வாழும். “யாதும் ஊரே யாவரும் கேளீர்’ எனும் பாடல் மூலம், மொத்த உலகும் சங்க இலக்கியத்தில் வந்து விடுகிறது.

டாக்டர் அறிவொளி (இடைக்கால இலக்கியமே): தமிழ் எக்காலத்திலும் அழியாது. இந்த மொழி அழியாமல் தடுக்க, தமிழ் இலக்கியங்களை கம்ப்யூட்டரில் ஏற்றுவதுதான் தீர்வு. அனைத்து மென்பொருட்களிலும் தமிழை புகுத்த வேண்டும். கண்ணகி ஒரு வசதி படைத்த குடும்பத்தை சேர்ந்தவர். அவரது கால் சிலம்பும் அரச குடும்பத்தை சேர்ந்த சிலம்பும் ஒரே மாதிரியானது என்பதில் இருந்து அறியலாம். ஆகவே சிலப்பதிகாரம் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே உரியது. தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் இலக்கியம் இடைக்கால இலக்கியம்தான். சங்க இலக்கியம் அனைத்து தரப்பு மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கவில்லை.

பேராசிரியர் அரங்க மல்லிகா (இன்றைய இலக்கியமே): அரவாணிகள் உட்பட அனைவரையும் சக மனிதர்களாக காண்பது தற்கால இலக்கியம்தான். பெண்ணிய சிந்தனை, பெண் கவிஞர்கள் இன்று அதிகமாக இருப்பதற்கு இன்றைய இலக்கியம்தான் காரணம். தலித் இலக்கியம், காதல், வீரம் ஆகியவற்றை இன்று வெளிப்படையாக பேச முடிகிறது. ஈழப் பெண் கவிஞர்கள் தங்கள் போராட்ட வாழ்க்கையை இலக்கியம் ஆக்கியுள்ளனர்.  தற்கால இலக்கியமே ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னை புனரமைத்துக் கொண்டிருக்கிறது. சங்க இலக்கியம் பெண்ணியம், தலித் இலக்கியம் பற்றி பேசுவதில்லை. ஆகவே தற்கால இலக்கியமே சிறந்தது. தமிழ்மொழி வளர்வது தற்கால இலக்கியம் மூலம்தான்.

சுந்தர ஆவுடையப்பன்(சங்க இலக்கியமே): சங்க இலக்கிய பாடல்களை புரிந்து கொள்ளவே முடியாது என கூறப்படுவது தவறு. முதல்வர் கருணாநிதி எழுதிய இலக்கியம் அனைத்தும் சங்க இலக்கியத்தில் எழுதப்பட்டவைதான். ஜாதி, மத வித்தியாசம் இல்லாத வாழ்க்கை சங்க இலக்கியத்தில் மட்டும்தான் உள்ளது. சங்க இலக்கியம்தான் தங்க இலக்கியம். தமிழர் அடையாளம். தமிழரின் வாழ்வுடன் இணைந்திருப்து சங்க இலக்கியமே.

தென்னவன் (இன்றைய இலக் கியமே): சங்க இலக்கியம் எனும் கடின நடையை உடைத்து, தொல்காப்பிய பூங்காவை முதல்வர் கருணாநிதி எளிமையாக அளித்தார். சங்கத் தமிழ், தொல்காப்பியம் இருக்கும் வரை தமிழ் இருக்கும். இன்றைய இலக்கியம் புதுக்கவிதை, திரைக்கதை தந்துள்ளது. மொழி, மக்களை வளர்க்க வேண்டும். இன்றைய இலக்கியம் இதை சிறப்பாக செய்கிறது.

இரு தரப்பினரின் விவாதத்துக்குப் பின் பேராசிரியர் சத்தியசீலன் அளித்த தீர்ப்பில், “”தமிழர் வாழ்வை ஒட்டியது சங்க இலக்கியம். ஆங்கில வாழ்க்கை முறை இடையே புகுந்து சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. சங்கத் தமிழ் நூல்களை படிக்கத் தூண்டினார் பாரதிதாசன். தமிழர் வாழ்வின் வீரம், காதல் அனைத்தும் சங்கத் தமிழில் உள்ளது. இடைக்கால தமிழில் அதீத கற்பனை உள்ளது. அதன் விளைவாக, பல நேரங்களில் இலக்கியம் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. தமிழர் மானம், வீரம், கொடை உயர சங்கத் தமிழ்தான் உதவுகிறது. தமிழர் வாழ்வுடன் பின்னி பிணைந்திருப்பது சங்க இலக்கியம்தான்,” என்றார். பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்கும் போதே மதிய உணவுக்கான வேளை நெருங்கி விட்டதால், அதுவரை பட்டிமன்றத்தை ரசித்துக் கொண்டிருந்த முதல்வர் கருணாநிதி, பாதியில் எழுந்து சென்றார். பட்டிமன்றம் முடிய பிற்பகல் 2.30 மணி ஆகி விட்டபோதிலும் சாப்பிட செல்லாமல் பொதுமக்கள் அமைதியாக இறுதி வரை ரசித்து கேட்டனர்.

Categories: semmozhi

யாதும் ஊரே யாவரும் கேளிர்

தெளிவாக இருந்த நீலவானில் கருப்பு மேகங்கள் ஒன்றோடொன்று மோதி இடி முழக்கம் செய்தன. ஈர்ப்பின் ஆற்றல், மின்னலாய், இடியாய் நீர்த்துளிகளை இணைத்தது. அந்தத் துளிகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து நீராக மாறி மழையாகப் பெய்தன. பெருமழை; வெள்ளம் திரண்டது. மழைநீர் மலையிலிருந்து கீழ்நோக்கிப் பாய்கிறது. வேகமாகப் பாய்ந்த அருவி, மலையின் அடிவாரத்தில் ஆறாக மாறுகிறது. “சான்றோர் கவி என”ப் பாய்கின்ற பேராறாய்ப் பாய்கிறது. தன்னுடைய தாயாகிய கடலைப் போய்ச் சேரவேண்டும் என்ற துடிப்பு அதனுள். ஆதலால் வேகம் வெளியே தெரியாதவாறு, ஆழமாய், அகலமாய் தன்னுடைய பெருமைகளை வெளியே காட்டிக் கொள்ளாத சான்றோர் போல ஓடுகிறது.
அப்படி அகன்று பாயும் நீரில் ஒரு புணை – தெப்பம் மிதக்கிறது. மக்களால் அழகு செய்யப்பட்ட வடிவும் தோற்றமும் கொண்ட தெப்பம். அந்த அழகுப் பூத்தேர் ஆற்றின் கடும் வெள்ளத்தில் இழுக்கப்பட்டுப் போகிறதே, என்ன செய்ய? நீந்திப்போய்க் காப்பாற்றி ஏதேனும் ஒரு கரையில் சேர்த்து விடலாமா?
முடிந்தால் எந்தக் கரையில் சேர்ப்பது?
அதன் போக்கிலேயே விட்டுவிடலாமா?
தானே மிதந்து, தானே நகர்ந்து, தானே நீரோட்டத்தோடு தானும் செல்வதுதான் அதனால் இயலுமா?
எல்லாம் கேள்விகள் தாம். விடை சொல்ல முடியாத கேள்விகள்.
வாழ்க்கையும் அப்படித்தான்.
மானிட வரலாறும் அதுதான்.
இங்கு ஊழ்தான் பேராறு.
அந்த விதியின் சுழியில் அகப்பட்டுத் துன்புறும் ஆருயிர்தான் தெப்பம். வாழ்வு பேராறு. இன்ப – துன்பக் கரைகளை ஒட்டிப் பாயும் காட்டாறு. இரண்டுமே பொய்மைகள். தீதும், நன்றும் பிறரால் உன்னைத் தேடி வரவில்லை. இந்தப் பிறப்பிலோ முற்பிறப்பிலோ நீ செய்த தீமையும் நல்லதும் இப்போது தொடர்ந்து வந்துள்ளன.
அதற்காக வருந்துவதும் மகிழ்வதும் பித்தர் செயல்.
துன்பமோ இன்பமோ வாழ்வின் முடிவு என்னவாக இருக்கும்?
சாதல் புதியதன்று. பிறப்பெடுத்த எல்லா உயிரும் இறுதியில் பெறும் மிகப்பெரிய தெய்வப் பரிசு அதுவே. ஆறு கடலை நோக்கி ஓடுகிறது. வாழ்வு சாவை நோக்கி ஓடுகிறது.
பாய்வதில் ஒரு மகிழ்ச்சி. வாழ்வதில் ஒரு இன்பம். அதனோடு நிறுத்திக் கொள்; வாழ்வே இன்பமெனக் கருதிவிடாதே. அப்படியே சாவைத் துன்பமானது என்றும் எண்ண வேண்டாம். ஆறு அதன் போக்கில் பாயட்டும். வாழ்வு அதன் இயல்பில் நகரட்டும்.

இவையெல்லாம் யார் சொன்னார்கள்?
கீதையின் தத்துவம் போல இருக்கிறதே; உபநிஷத்துகள் கூறுவன போல உள்ளனவே! இவை தமிழன் கண்ட தத்துவ ஞானம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கனிந்திருந்த ஞானப்பிழம்பில் ஒரு சிறு துளிதான் இவை. சங்க இலக்கியத்தை ஆழமாகவும், கூர்மையாகவும் நோக்கினால் இவை போன்றவை மணிகளாகச் சிதறிக் கிடப்பதைக் காணலாம்.
கணியன் பூங்குன்றனார் என்னும் சங்கப்புலவர் பாடி நமக்குக் கிடைத்திருப்பது ஒரே ஒரு பாடல்தான்.
புறநானூறில் வரும் இந்தப் பாட்டின் முதல் வரியைப் பெரும்பாலும் மேடை ஏறும் எல்லோரும் சொல்லாமல் இருப்பதில்லை.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பதுதான் அந்த முதல் வரி.
ஆனால் அதைத் தொடர்ந்து வரும் பாடல் அடிகளில் ஞான நிறைவைக் கணியன் பூங்குன்றனார்
பொதிந்து வைத்திருப்பதை எத்தனை பேர் உணர்வார்கள்?
*தீதோ, நன்மையோ, இன்பமோ, துன்பமோ பிறரால் பிறரிடமிருந்து வருவதல்ல; நம்மால் நம்மிடமிருந்தே வருகின்றன* என்ற தெளிவு கிடைத்தது.
ஆதலால் வருந்துவதும் மகிழ்வதும் வேண்டா; சாதலும் வாழ்வதும் இயற்கையில் என்றும் நடப்பது தான் என்ற உணர்வும் மேலிடுகிறது.
மானுடப் பிறப்பு நடந்த ஒரே காரணத்துக்காக, அந்த மண் மட்டுமே சொந்தம் என்று கொண்டாடுவது பிழை. காலடிபடும் எல்லா மண்ணும் எல்லா ஊரும் சொந்த ஊர்தான். அப்படி விரிந்த மனத்தோடு எல்லா இடங்களையும் அன்போடு நேசி. வீடு, வாசல், ஊர், ஜாதி, மொழி, இனம் என்ற எல்லைகளைத் தாண்டியும் எண்ணிப்பார். பலநூறு ஆண்டுகள் இவற்றை எல்லாம் எண்ணி ஆராய்ந்து தெளிந்த பேரறிஞர்கள், அருளாளர்கள் கண்ட முடிவு இது.
செயலாற்ற முற்படும்போது இரண்டு வகையான மனச்சிக்கல் உன்னை எதிர் நோக்கலாம்.
செல்வம், செயலாற்றும் தன்மை, கல்வி, அறிவு, செல்வாக்கு இவற்றால் மேம்பட்டவர்கள் “மாட்சியில் பெரியவர்கள்”.
பெரிய விளக்கின் முன்னால் கை விளக்கா?
கதிரவனின் ஒளி முன்னால் அகல் விளக்கா?
கதிரவன் அவனளவில் பெரியவன்; கை விளக்கும் தன்னளவில் பெரியதே. “அவரவர் ஆற்றான்” என்பது பொதுவிதி. சிறியன தத்தம் எல்லைக்குள் பொலிய வேண்டும். அதுவே சிறப்பு; பெருமைக்கும் உரியது. பிறரோடு ஒப்பிட்டுத் தன்னை நிலைநிறுத்தும் பண்பு ஒவ்வாதது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆற்றல். ஒருவரை ஒருவரோடு இணைத்துப் பார்க்கும் போது செயல்படுவதில் குறைகள் தோன்ற நேரும்.
உயர்வு மனப்பான்மை பிறரை மதிக்காத செருக்கை உண்டாக்கும். பிறரை எள்ளத் தோன்றும். ஆதலால் சிறியோரை இகழ்தல் எந்த நிலையிலும் கூடாது. “மாட்சியில் பெரியோரை வியந்து நிற்பதைச்” செய்தாலும் கூட ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளலாம்.
ஆனால் சிறியவர்களை, நம்மிலும் தாழ்ந்தவர்களை இகழ்வது பெருங்குற்றம்.
ஆற்றில் ஓடும் நீர் எதை எதிர்பார்த்துப் பாய்கிறது?
மலையிலும் ஆறு பாய்கிறது. மடுவிலும் பாய்கிறது. அதற்கு இரண்டும் ஒன்றுதான்.
வாழ்விலும் ஏற்ற, இறக்கங்கள் உண்டு. ஏற்றம் வருவதும் இறங்கித் தாழ்வதும் நம் கையில் இல்லை. இன்ப, துன்பம், மகிழ்ச்சி, வருத்தம், வெற்றி, தோல்வி, பிறப்பு, இறப்பு, இருள்,
ஒளி என்ற எதிரெதிர் இணைகள், இந்த முரண்பட்டனவாகத் தோன்றும் பண்புகள், மனித நெஞ்சை எந்த வகையிலும் பாதிக்காது. அதுவே உயர்ந்த நிலை; ஒவ்வொருவரும் பெறவேண்டிய உன்னத நிலையும் ஆகும்.
இந்தத் தத்துவம் இன்று நேற்று தோன்றியதன்று. ஈராயிரம் ஆணடுகளுக்கு முன்னர் கணியன் பூங்குன்றனார் நெஞ்சில் மலர்ந்த உயர்ந்த கோட்பாடு. *இதனுள் சமய வெறி காணோம்; பணிசெய்து இன்ப நிலை காணும் மேம்பாடே ஒளிர்கிறது.*
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னாது என்றலும் இலமே மின்னொடு
வானம் தண்துளி தலைஇ ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆதலின் மாட்சியில்
*பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே*. (புற.192)
முனைவர் கி.சுப்பிரமணியன்
நன்றி: தமிழ்மணி (தினமணி)

Categories: semmozhi
Follow

Get every new post delivered to your Inbox.